குடியேறிகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் முழ்கியது – நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி?

339 0

gallerye_173032235_447902குடியேறிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மத்தியதரை கடல் பிராந்தியத்தில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் நூறு பயணிகள் இந்த அனர்த்தத்தில் மரணித்திருக்கலாம் என கவலை வெளியிடப்பட்டள்ளது.

இத்தாலிய கரையோர காவல் படையினர் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை எட்டு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நான்கு பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த இத்தாலிய அதிகாரிகள் தொடர்ந்தும் தேடும் பணிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர பிரான்ஸ் கடற்படையின் கப்பல் ஒன்று மற்றும் அந்த பிராந்தியத்தில் பயணித்துக் கொண்டிருந்த இரு சரக்கு கப்பல்களும் தேடுதல் பணியாளர்களுக்கு உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் கப்பலில் பயணித்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு தரை மார்க்கமாக செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போது கடல் மூலமான பயணம் ஆபத்தான போதிலும், அப்படியான பயணத்தையே அகதிகளை கடத்துபவர்கள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினமும் அந்த கடல்பிராந்தியத்தின் ஊடாக சென்றபோது ஆபத்தான நிலையில் இருந்த 550 குடியேறிகளை இத்தாலிய கரையோர காவல் துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

அதேவேளை, புது வருடம் பிறந்து 15 நாள் நிறைவடைந்துள்ள நிலையில், பல நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நகரங்களை சென்றடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு காலப்பகுதியினில், ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் மார்க்கமாக செல்ல முயன்ற 5 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.