கண்டியில் உயிரிழந்தவர்கள் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினாலேயே உயிரிழந்தனர்

314 0

image-of-H1N1கண்டி போதனா வைத்தியசாலையில் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு பறவை காய்ச்சல் கிடையாது என மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் மிருக ஆய்வு பிரிவின் பிரதம அதிகாரி டொக்டர் ஹேமால் கொதலாவல தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டுள்ளமையினால் மக்களுக்கிடையில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பறவை காய்ச்சல் அற்ற நாடு எனவும், பறவை காய்ச்சலுக்கான வைரஸ் எச்.வன்.என்.வன் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கன்னோருவ பகுதியிலுள்ள சுகாதார திணைக்களத்தின் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவில் இலங்கை பறவை காய்ச்சல் அற்ற நாடு எனவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

எச்.வன்.என்.வன் இன்புளுவன்ஸா வைரஸ் மனிதர்களிடத்திலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் எனவும், பறவை காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது எனவும் சுகாதார அமைச்சின் மிருக வைத்திய அதிகாரி டிக்கிரி விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச மிருக ஆய்வு அமைப்பில் இலங்கை அங்கம் வகிக்கின்றமையினால், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மிருகங்கள், அந்த நிறுவனத்தின் தரத்திற்கு அமையவே இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக மிருகங்கள் இறக்குமதி செய்யப்படும் போது, குறித்த நாடு 6 மாதங்களுக்கு பறவை காய்ச்சல் அற்ற நாடாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடும் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் பின்னரே மிருகங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றமையினால், நாட்டிற்குள் பறவை காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் கிடையாது எனவும் அவர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

கோழி பண்ணைகளின் கடமையாற்றுவோர் எந்தவித அச்சத்தையும் கொள்ள தேவையில்லை என அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கண்டி போதனா வைத்தியசாலையில் ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் தொற்றுக்குள்ளான 7 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 7 நோயாளர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கண்டி போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வரை பெண்கள் வாட்டில் 2 பேரும், அதிதீவிர சிகிச்சை பிரிவில் மற்றுமொரு பெண்ணுமாக மூன்று பெண்களும், நான்கு ஆண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.