ஹம்பாந்தோட்டை கலகம்-பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது

282 0

Pujithஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கலகம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற குழப்பம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையை கோரியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சியில் திட்டமிடப்பட்ட கலகங்கள் ஏற்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆராயுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

சீன முதலீடுகளை உள்வாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியில் ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு வலயமொன்றை உருவாக்கும் முதற்கட்ட பணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

கடந்த 7ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுகம் அமைந்துள்ள மிரிச்சவில பிரதேசத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நல்லாட்சி அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 7ஆம் திகதி பிக்குகள், பிரதேச மக்கள் எனப் பலர் இணைந்து முன்னெடுத்த போராட்டத்தால் குழப்பநிலை ஏற்பட்டது.

போராட்டங்களுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அதனை மீறி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் என்பன நடத்தப்பட்டன.
சம்பவ இடத்தில் பொலிஸ்மா அதிபரும் பிரசன்னமாகியிருந்தார்.

கலகத்தின்போது பௌத்த பிக்குகள் உட்பட பலர் காயமடைந்த்தோடு 50 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்படுத்தப்பட்ட கலகத்திற்குப் பின்னால் சூழ்ச்சி ஏதும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்தும் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.