அன்பார்ந்த யேர்மனி வாழ் தமிழீழ மக்களே-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

129 0

அன்பார்ந்த யேர்மனி வாழ் தமிழீழ மக்களே

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27ஆம் நாள் ஓர் இடத்தில் ஒன்றுகூடி எமது மாவீரர்களை போற்றி வணங்கி உறுதி எடுத்துக்கொள்வோம். இம்முறையும் மீண்டும் டோட்முண்ட் (Dortmund) நகரில் வழமைபோல மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துவதற்கான அனுமதிக்காக காத்திருந்த வேளை, மிக அதிகமாகப் பரவிவரும் தொற்று நோய்ப் பரவல் காரணமாக மண்டப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் நான்கு வெவ்வேறு இடங்களில்(27337 Bremen,Blender, 58332 Schwelm,70372 Stuttgart Cannstatter Wasen, 12159 Berlin) மாவீரர் நாளினை நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம். மீளவும் ஓர் சிக்கலான அரசியல் பொறிக்குள் எம்மை சிக்க வைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் எமது எதிரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலப்பகுதியில் ஒருகுடையின்கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாவீரர்நாளினை நினைவு கூருவோம்.

மீண்டும் எமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி எமது அரசியல் இலக்கினை அடையவிடாது தடுப்பதற்கான உளவியல் ஆயுதமாக எமது உன்னதமான தேசிய எழுச்சி நினைவு நாட்களை பயன்படுத்துவதனை நாம் அனுமதிக்கமுடியாது.

எவ்வாறான இடர்கள் ஏற்படினும் அந்த இடர்களை தகர்த்தெறியும் மனவலிமையினை எமது மாவீரர்களின் ஓர்மநினைவுகள் எமக்குள் விதைத்துக்கொண்டே இருக்கும்.

“எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.”

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்.