போகி புகை மூட்டம்: சென்னையில் 19 விமான சேவைகள் தாமதம்

247 0

201701131151007971_Bogi-smoke-in-Chennai-delays-19-flights_SECVPFபோகி பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு நகரம் முழுவதும் எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் பனி மூட்டத்துடன் அடர்ந்த புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.

தமிழ் புத்தாண்டாம் தைத்திருநாளுக்கு முந்தைய கடந்த ஆண்டின் கடைசிநாளான மார்கழி மாதத்தின் 29-ம் தேதியை வழியனுப்பி வைக்கும் விதமாக தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை போகி தீயில் எரிப்பது நமது பாரம்பரிய மரபுவழி வந்த கலாச்சாரமாக விளங்கி வருகிறது.

அவ்வகையில், மார்கழி மாதத்தின் இறுதிநாளை வழியனுப்பி வைக்கும் விதமாக நேற்று தமிழகம் முழுவதும் பழைய பொருட்கள் போகி தீயிலிட்டு எரிக்கப்பட்டன. குறிப்பாக, பல லட்சம் மக்கள் ஒரே இடத்தில் வாழும் சென்னையில் வசிக்கும் அனைவரும் தங்களது பழைய பொருட்களை நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் தீயிலிட்டு எரித்தனர்.

இதன் விளைவாக ஏற்பட்ட பெரும்புகை மூட்டம் பனி மூட்டத்தை கடந்து வளிமண்டலத்துக்கு செல்ல முடியாத நிலை நீடித்தது. காலை பத்து மணிவரை சென்னை நகரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.

சென்னை மீனம்பாக்கம் பகுதியிலும் இந்த புகை மூட்டம் நீடித்ததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் மற்றும் சென்னையில் தரை இறங்க வேண்டிய விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

குறிப்பாக, மஸ்கட், மொரீஷியஸ், கொழும்பு ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்கள் உள்பட சென்னையில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக தரையிறங்கின.

துபாயில் இருந்து வந்த ஒரு விமானம் கொச்சி நகருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பெங்களூர், கோயமுத்தூர் நகரங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானச் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டது.