ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம்

298 0

201701131142579465_Jallikattu-issue-DMK-struggle-condemning-central-and-state_SECVPFஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம் நடத்தி வருகிறது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறும். அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இதனை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பீட்டா அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்தே சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது.

இந்த தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முன்வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை ஏற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து கூறி வந்தார். மத்திய அரசும் இதனையே உறுதிபட தெரிவித்து வந்தது. ஆனால் அதுபற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், பிரதமரை சந்தித்து வலியுறுத்துவதற்காக டெல்லி சென்றனர். அங்கு சுற்றுச்சூழல் மந்திரியான அனில் மாதவ் தவேயை சந்தித்து பேசினர். அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழக வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தனர்.இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்குள் தீர்ப்பு கூற முடியாது என்று மறுத்து விட்டனர். தீர்ப்பு எழுதுவதற்கான பணிகள் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடை 3-வது ஆண்டாக நீடிக்கிறது. இந்த ஆண்டும் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடி வந்த மாணவர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட தலை நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். இதன்படி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர். மரபு காக்க…. மானம் காக்க திரண்டிருக்கிறோம். செயலற்று கிடக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம். அடக்குவோம், அடக்குவோம். திமிலையும், திமிரையும் அடக்குவோம் என்பது போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் துரைமுருகன், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், மோகன், தாயகம் கவி, வாகை.சந்திரசேகர், முன் னாள் அமைச்சர் ரகுமான் கான், துறைமுகம் காஜா, கே.கே.நகர் தனசேகரன், பூச்சி முருகன், ஐ.கென்னடி உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.