அரசியல் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்

256 0

2058165462ranilwikமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். அது கைகூடவில்லை. அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரானார் (எம்.பி). அரசாங்கத்தின் அபிவிருத்தி வேகத்தினால், அவர் தனது எம்.பி பதவியையே தக்கவைத்துக் கொள்வதற்குப் போராட்டம் நடத்துகின்றார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“பலம்மிக்கதோர் இலங்கை” எனும் தூரநோக்குடைய பொருளாதாரத் திட்டத்தை, அலரிமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார்.

அதன்பின்னர் இடம்பெற்ற கேள்விநேரத்தின் போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   முன்னதாக கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்களில் ஒருவர், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை, இந்த அரசாங்கம் சீனாவுக்கு விற்பனை செய்வதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இவ்வாறு ஏன்? குற்றஞ்சாட்டுகின்றனர் என்று வினவினார்.   இக்கேள்விக்கு பதிலளித்த பிரதமர், அரசியல் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்.

அந்தப் பதவி கிடைக்கவில்லை. அதன்பின்னர், நாடாளுமன்ற உறுப்பினரானார் (எம்.பி).   நல்லாட்சி அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தில் அள்ளுண்டுபோயுள்ள அவர், எம்.பி பதவியையே தக்கவைத்து கொள்வதற்கு திண்டாடுகின்றார்.   நாங்கள், விகாரைகளை உடைக்கவில்லை. மக்களின் காணிகளை அபகரிக்கவில்லை. காணிகளை விற்கவில்லை. துறைமுக நகர் திட்டத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட காணியையும் மீளப்பெற்று, 99 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளோம்.   தலதாமாளிகையை நாங்கள் உடைக்கவில்லை. மல்வத்துப் பீடத்தை பிளவுப்படுத்துவதற்கு முயலவில்லை. மல்வத்துப் பீடத்துக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு முயன்றவர்கள், மகாநாயக்க தேரர்களை வணங்கி, கெஞ்சுகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியாக்கியதும், என்னை பிரதமராக்கியதும் வெறுமனே குந்தியிருப்பதற்கு அல்ல. நாட்டை கட்டியெழுப்புவதற்கே எங்களுக்கு மக்களாணை கிடைத்தது. அந்த ஆணையின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்போம்.

ஹம்பாந்தோட்டை பிரதேச சபையில் இல்லாமற்போனால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கான ஒட்சிசன் இல்லாமற்போகும். பொருளாதாரத்தை மேம்பாட்டுக்கு தீ மூட்டவேண்டும். அவ்வாறு தீ மூட்டப்பட்டமையால்தான், இறாலை போல துள்ளுகின்றனர் என்றார்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் நல்ல வரவேற்பு உண்டு. உதவிகள் கிடைக்கின்றன. சத்தத்தை போட்டு எமது பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்திவிடமுடியாது. நாங்கள் முன்னோக்கி நகர்ந்துகொண்டே போவோம்.   எனினும், அபிவிருத்தியை கண்டு, அச்சம் கொண்டவர்கள் மீண்டும் அதிகாரத்தை பெற்று, கொமிஸ் பெற்றுக்கொள்வதற்கே முயற்சிகின்றனர்.   தனியொரு கட்சியினால், அரசாங்கத்தை அமைக்கமுடியாது. ஆகையால்தான் நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டுள்ளது. நல்லாட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டால், கலந்துபேசி அவற்றுக்கு தீர்வு காண்போம்.

அவ்வாறுதான் கடந்தகால பிரச்சினைகளுக் தீர்வு காணப்பட்டது.   அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுவது எமக்கு பெரிய பிரச்சினையல்ல. பத்திரிகைகளுக்கு நத்தார் காலத்தில் செய்திகள் இருக்காது. அதனால்தான், இவ்வாறான செய்தி பரப்பிவிடப்பட்டுள்ளது.   அவர்கள் இவ்வாறு சதியென்று பேசுவதற்காக நாங்கள் என்னச் செய்வது. எவர் என்ன கூறனாலும் அரசாங்கத்துக்கு ஆபத்து ஏற்படவில்லை என்றார்.