மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்ற புதுமண தம்பதி

179 0

மணக்கோலத்தில் புதுமண தம்பதி நாட்டு காளைகள் பூட்டப்பட்ட மாட்டுவண்டியில் சென்றது அந்தப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகத்தில் ஏற்பட்டு வரும் நவீனகால மாற்றத்தால் பல பாரம்பரிய கலாசாரங்கள் மறக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதில் மாட்டு வண்டி கலாசாரமும் ஒன்று.

அப்படி ஒரு கலாசாரத்தை மீண்டும் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புகுத்த வேண்டும் என்பதற்காக புதுமண தம்பதி புதிய முயற்சி எடுத்து உள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, விவசாயி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 28), என்ஜினீயர். இவருக்கும் ஏழூர் பகுதியை சேர்ந்த சரண்யா (24) என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி தங்கள் சொந்த வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது அவர்கள் கோதவாடி பிரிவு அருகே வந்தபோது திடீரென்று காரை விட்டு இறங்கினார்கள். பின்னர் அங்கு நிறுத்தப்பட்ட மாட்டு வண்டியில் ஏறினார்கள்.

மணக்கோலத்தில் இருந்த பிரகாஷ் மாட்டுவண்டியை ஓட்ட, பின்னால் சரண்யா அமர்ந்து இருந்து ஊர்வலமாக சென்றனர். கோதவாடி பிரிவில் இருந்து கோடங்கிபாளையம் வரை 4 கி.மீ. தூரம் அவர்கள் மாட்டுவண்டியில் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

பொதுவாக திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி, தங்கள் வீட்டிற்கு சொகுசு காரில் செல்வது உண்டு. ஆனால் இங்கு மணக்கோலத்தில் புதுமண தம்பதி நாட்டு காளைகள் பூட்டப்பட்ட மாட்டுவண்டியில் சென்றது அந்தப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து புதுமண தம்பதி கூறும்போது, தற்போது இளைஞர்கள் மத்தியில் நமது பாரம்பரியங்கள் மறந்துவிட்டன. அத்துடன் திருமணங்களும் பழைய மரபுகள், கலாசாரங்களை மறந்து நடந்து வருகிறது. அவை இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்பதற்காகதான் நாங்கள் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்றோம். இது எங்களுக்கு பழைய பாரம்பரியத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றனர்