மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற பொறிமுறைக்கு ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்- நல்லிணக்கத்திற்கான செயலணி

274 0

chandrika-04-01-2017-1இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற பொறிமுறைக்கு ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என நல்லிணக்கத்திற்கான செயலணி பரிந்துரை முன்வைத்துள்ளது.

நல்லிணக்கத்திற்கான செயலணி தனது பரிந்துரைகளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நேற்றைய தினம் சமர்ப்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, ஸ்தாபிக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டமைப்பின் அனைத்து வழக்கு விசாரணைகளின் போதும், உள்நாட்டு நீதிபதிகளுடன் ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் பிரசன்னமாக வேண்டும் என அந்த செயலணி தனது அறிக்கையின் ஊடாக பரிந்துரை முன்வைத்துள்ளது.

விசேட ஆலோசனை அலுவலகத்தின் ஊழியர்களுடன், சர்வதேச நிபுணர்கள் தொடர்புப்பட்டிருக்க வேண்டும் எனவும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், உடல்நல குறைவினால் ஜனாதிபதி இந்த நிகழ்விற்கு பிரசன்னமாகவில்லை என பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான  டி.எம்.சுவாமிநாதன் மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.