ஐஓசியிடமிருந்து எண்ணெய்க் குதங்களைப் பெறுவதற்கு இந்தியாவுடனேயே பேசவேண்டும்!

551 0

trincomalee-oil-farmதிருகோணமலை சீனன்குடாவில், இந்திய எண்ணெய் நிறுவனமான ஐஓசியினால் நிறுவப்பட்ட மூன்று எண்ணெய்க் குதங்களை மீளப் பெறுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது குறித்து இந்திய அரசாங்கத்துடனேயே பேச்சு நடாத்தவேண்டுமென ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையைக் கருத்தில் கொண்டு மேலதிகமாக டீசல் மற்றும் எண்ணெயைச் சேமித்துவைக்கும் நோக்கில் சீனன்குடாவில் உள்ள மூன்று எண்ணெய்க் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து மீளப் பெறும் அமைச்சரவைத் தீர்மானம் அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி உறுதி செய்துள்ளார்.

தேசிய தேவைப்பாடுகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து குறித்த நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானத்தில் தலையிடும் உரிமை எந்தவொரு நிறுவனத்துக்கும் கிடையாது. எனினும், அயல்நாட்டுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள நாம் விரும்பவில்லை என்றும் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள், சீனன்குடா எண்ணெய்க் குதங்களைப் பார்வையிடுவதற்குச் செல்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி, தேவைப்பட்டால் சிறிலங்கா இந்த எண்ணெய்க் குதங்களை மீளப்பெற முடியும், இதுகுறித்து இந்திய அரசாங்கத்துடனேயே சிறிலங்கா அரசாங்கம் பேச வேண்டும் என்று, இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சியாம் போரா தெரிவித்துள்ளார்.