கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடிக்கவே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார் என்று செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு மா. சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடிக்கவே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. எம்எல்.ஏ. மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜுக்கு இப்படி ஒரு அதீத கற்பனை எப்படி வந்தது என்று தெரியவில்லை.
சசிகலாவுக்கு பொதுமக்கள் மத்தியிலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு இருக்கிறது. அவரது வருகையை சகிக்க முடியாமல் இருக்கிறார்கள். அதை சமாளிக்கவே கலைஞர் பெயரை இழுத்து இருப்பார் என்று கருதுகிறேன்.
மந்திரி பதவியில் இருப்பவர்கள் பதவியின் தகுதி அறிந்து பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக எதையும் பேசக் கூடாது. கலைஞர் எப்போது சொன்னார்? யாரிடம் சொன்னார்? எங்கே சொன்னார்? என்று ஆதாரத்தோடு பேச வேண்டும். முதுபெரும் தலைவர் மீது முதிர்ச்சி இல்லாமல் புழுதிவாரி வீசுவது கண்டனத்துக்குரியது.
இப்படி கோமாளித்தனமாக பேசுவதை தவிர்த்து, தான் வகிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் செயல்படுவதுதான் அமைச்சர் பதவிக்கு அழகு.இவ்வாறு அவர் கூறினார்.

