தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை மோடி தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி தொலைக்காட்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் மீது அரசு ஏற்றிய சுமையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறினாலும் வரும் நாட்களில் அந்த சுமைகளை மக்கள் மீதிருந்து இறக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு இல்லை.
கிராமப்புறப் பகுதிகளில் பணப்பரிவர்த்தனை வங்கிகளின் மூலம் மிகவும் குறைவாகவே நடைபெறுகிறது. இதற்காக கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியான பணப் பரிவர்த்தனையை செய்வதற்குண்டான எந்தவிதமான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கிறது, இனிமேல் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பது குறித்த அறிவிப்பு மோடியின் உரையில் இடம் பெறவில்லை.
கருப்பு பண ஒழிப்புக்காக பிரதமர் அறிவித்த 50 நாட்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட துவங்காமல் அதற்கு நேர்மாறாக தேக்க நிலையே தொடர்கிறது. இதற்கு முற்றுபுள்ளி வைத்து, மீண்டும் நாட்டு மக்கள் பணத்தட்டுப்பாடின்றி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாக இருக்கிறது அதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மக்கள் மீது மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிற சுமையை மத்திய அரசே குறைக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.
வீட்டுக்கடன், வட்டித் தள்ளுபடி, மூத்த குடிமக்களுக்கான டெபாசிட்டுக்கு வட்டி, கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் உத்தரவாதம் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் விவசாயிகள் எதிர் பார்த்தார்கள். இதனையும் நிறைவேற்ற வேண்டியது பிரதமரின் கடமையாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

