அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலாவை, திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சட்டமன்ற தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
விஜயகாந்தை முதல்- அமைச்சர் வேட்பாளராக அறிவித்து களம் கண்ட இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் திருமாவளவன் ஆகியோரால் கூட வெற்றி பெற முடியவில்லை.
விஜயகாந்தை முதல்- அமைச்சர் வேட்பாளராக அறிவித்ததால், மக்கள் நலக் கூட்டணியின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தலுக்கு பின்னர் அது பொய்த்துப் போனது.இதன் பின்னர் கூட்டணி தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மக்கள் நலக் கூட்டணி கலகலத்து போனது. அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, திடீரென கூட்டணியை விட்டு வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
இந்த கூட்டணியில் அங்கம் வகித்த விஜயகாந்த் ஜி.கே.வாசன் ஆகியோர் ஏற்கனவே வெளியேறி விட்ட நிலையில், திருமாவளவனும், 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் மட்டுமே மக்கள் நலக்கூட்டணியில் உள்ளனர்.பல கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த போதே, மக்கள் நலக் கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தற்போதைய சூழலில் இந்த கூட்டணியால் எதிர் காலத்தில் எதையும் சாதிக்க முடியாது என்றே அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.
இதனால் பாராளுமன்ற தேர்தலின் போது திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், 2 கம்யூனிஸ்டு கட்சிகளும், நிச்சயமாக மாறுதலை தேடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்த கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலாவை, திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன், சாதி பாகுபாடின்றி அ.தி.மு.க. தொடர்ந்து இயங்கும் என்று சசிகலா கூறியதை வரவேற்று கருத்து தெரிவித்தார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் நோக்கத்திலேயே காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.இதன் மூலம் பாராளு மன்ற தேர்தலுக்கு இப்போதே அச்சாரம் போட்டது போல இருக்கும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை திருமாவளவன் மேற்கொண்டார். காவிரி பிரச்சினை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார்.இதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாலும் கூட்டணி வைப்பது தொடர்பாக முன்னணி நிர்வாகிகள் யாரும் எந்த கருத்துகளையும் கூறவில்லை. இதனால் திருமாவளவன் அ.தி.மு.க. பக்கம் சாயமுடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

