போர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் அணைகள்,பதுங்கு குழிகளை அகற்றுங்கள்

300 0

முல்லைத்தீவு கரைதுறைபற்றின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களில் போர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் அணைகள், பதுங்கு குழிகள் முழுமையாக மூடப்படாததன் காரணமாக மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டில் குறித்த கிராமங்கள் பாதுகாப்பு வலயங்களாக விளங்கிய போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பகுதிகளில் தஞ்சம் அடைந்திருந்தனர். இக்காலத்தில் இடைவெளி இல்லாமல் பதுங்கு குழிகளும் போரில் ஈடுபட்டவர்களினால் கிராமங்களின் எல்லைகளில் அமைக்கப்பட்ட மண் அணைகளும் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைபற்று பிரதேச செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் எடுத்துரைக்கப்பட்ட போதிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தென்னை மரங்கள் உட்பட பயிர்ச் செய்கைக்காக நிலங்களை தயார்படுத்த முடியாமல் இருப்பதாகவும் பதுங்கு குழிகளில் காட்டு விலங்குகள், பாம்புகள் உறைந்திருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

போர் கால பதுங்கு குழிகளையும் மண் அணைகளையும் முழுமையாக அகற்றுவதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைக்கப்பட்ட பாரிய மண் அணைகள் காரணமாக மழை காலத்தில் இயல்பாக வழிந்தோடும் வெள்ளம் தற்போது மக்கள் குடியிருப்புகளில் கடந்த பத்தாண்டுகளாக தேங்கி நிற்பதாகவும் இதன் காரணமாக மழை காலத்தில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த 450 வரையான குடும்பங்கள் தொற்று நோய் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.