நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகள் மெராயா நகரத்தினை அண்மித்து உள்ள பகுதியில் கொட்டப்படுகின்றது.
இங்கு கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் எல்ஜீன் ஓயா கிளை ஆற்றில் கலக்கப்படுவதால் ஆற்று நீர் மாசடைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரதேச மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும் இந்த ஆற்று நீரையே பயன் படுத்துகின்றனர். இதன் காரணமாக தாம் சுகாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நகரத்தில் சேர்க்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவை பாதை ஓரத்தில் கொட்டப்படுவதாலும் அதனை பறவைகள், நாய்கள் இழுத்துச் செல்வதாலும் அந்த பகுதியின் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசப்படுவதுடன், நுளம்பு தொல்லையும் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல தடவைகள் அதிகாரிகளிடம் கூறியபோதும் இதுவரை எவரும் கவனத்திற்கு எடுக்கவில்லை என இந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே நுவரெலியா பிரதேசசபை அதிகாரிகள் நகரத்தின் சுகாதார நடவடிக்கையை கருத்தில் கொண்டு குப்பைகளை முறையான இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

