ரவிராஜ் கொலைவழக்குத் தீர்ப்பு, சர்வதேசத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும்!

259 0

download-1-1-e1483023170145தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ரவிராஜின் படுகொலைத் தீர்ப்பானது சர்வதேசத்தின் மத்தியில் சிறீலங்காவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு ஒத்துழைத்த மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சமன் இரத்னப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உட்பட மோசமான மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதியை நிலைநாட்டும் பொறுப்பை தற்போதைய ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திடம் ஒப்படைத்தது சரிதானா என்ற கேள்விகளும் சர்வதேச சமூகத்திற்கு எழும் என்றும் குறிப்பிட்டுள்ள சமன் ரத்னப்பிரிய, இதனால் உள்நாட்டு விசாரணைகளுக்குப் பதிலாக மீண்டும் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கைகள் வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், 2015ஆம்ஆண்டு ஜனவரி மாதம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் மீறப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுபற்றி தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கின் நீதிமன்றத் தீர்ப்புடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பிலும், இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய கொலையாளிகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவார்களா, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்குமா போன்ற விடயங்களில் பாரதூரமான கேள்விகள் எழுந்துள்ளன.

முடக்கப்பட்டிருந்த ரவிராஜ் படுகொலை குறித்த விசாரணைகள் ஆட்சிமாற்றத்தை அடுத்து காவல்துறையினரால் துரிதப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது ரவிராஜின் கொலையை நேரில் கண்ட சாட்சிகூட வெளியில் வந்தது. ஈற்றில் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் ஜுரி சபை கோரப்பட்டதையடுத்து ஜுரி சபை நியமிக்கப்பட்டது.  அப்படி நியமிக்கப்பட்ட ஜுரி சபையானது கடைசியாக அளிக்கப்பட்ட சாட்சியின் அடிப்படையில் அதுவரையில் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தவர்களையும் சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களையும் விடுதலை செய்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.

நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக எமக்கு பிரச்சனையில்லை. ஏனெனில் ஜுரி சபையின் தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் இதனை தெளிவாக படுகொலை என நிருபிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்படியான தீர்ப்பின் மூலம் படுகொலைக்கு உள்ளாகியவர்களின் குடும்பத்தினருக்கு நீதிகிடைக்குமா என்ற விடயம் தொடர்பில் எமக்கு கேள்வி இருக்கின்றது.

அது முதலாவது கேள்வி. அது அப்படி நடக்கப்போவதில்லை. எமக்கு இருக்கின்ற இரண்டாவது கேள்வியாதென்றால் படுகொலைகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் செயற்படுவோம் என தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. கொலையாளிகளையும் ஊழல் பேர்வழிகளையும் கைதுசெய்வதாக வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறுகின்ற விடயமானது ரவிராஜ் படுகொலைச் சந்தேக நபர்களை விடுதலைசெய்ததன் மூலமாக கணிசமான ரீதியில் நிருபணமாகியுள்ளது. இதன் மூலம் மக்களின் நம்பிக்கை குலைந்துபோவதை நிறுத்தமுடியாது போகும். இதனால் நாட்டிற்குள் மட்டுமன்றி சர்வதேசத்திலும் இது தொடர்பாக கேள்வி எழும்”

ரவிராஜ் படுகொலை தீர்ப்பு உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் சமன் இரத்னப்பிரிய குறிப்பாக கடந்த ஆட்சியின் போது தெரிவிக்கப்பட்ட மின்சாரக் கதிரை அச்சம் மீண்டும் எழலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் நாம் மின்சாரக் கதிரை தொடர்பாக பேசியமை குறித்து அனைவரும் அறிவர். ஸ்ரீலங்காவில் போரில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஜெனிவாவில் அன்றேல் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்லப்படுவர் என்றே பேசப்பட்டது. ஆனால் ஆட்சிமாற்றத்தை அடுத்து அந்த நிலை மாறியது. எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாட்டிற்குள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நாட்டின் ஆட்சியாளர்களால் தீர்மானம் எடுக்கப்பட சர்வதேசத்தினால் இடமளிக்கப்பட்டது. சர்வதேசத்தை நாட்டிற்கு தேவையான விதத்தில் கையாள்வதற்கான நிலை ஏற்படுத்தப்பட்டது.

ஆட்சிக்குவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினூடாக அரசாங்கத்தினூடாக நாட்டுமக்களுக்கு அவசியமான நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறை உருவாக்கப்படும் என்ற நிலைப்பாட்டை சர்வதேசம் ஏற்றிருந்தது. இந்த வாக்குறுதியை இலங்கை ஆட்சியாளர் வெளிநாடுகளுக்கு சென்று வழங்கியிருந்தனர். ஜனாதிபதி இதனை ஜெனிவாவிற்கு நியூயோர்க்கிற்கு சென்று கூறியிருந்தார். பிரதமரும் இதேவிதத்திலேயே கூறியிருந்தார். அரசின் வெளிவிவகார அமைச்சரும் இதேவிதத்திலேயே கூறியிருந்தார். அழுத்தமளிக்க வேண்டாம்.

இந்த விவகாரத்தை நாட்டிற்குள் கையாள்வதற்கு எமக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என பல்வேறு அமைப்புக்களும் சென்று கூறியிருந்தன. அதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரவிராஜின் படுகொலை குறித்த நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் அப்படி இடமளிக்கப்பட்டமை கேள்விக்கு உட்படுத்தப்படும். இது பட்டப்பகலில் இடம்பெற்ற படுகொலை.

அரசியல் முக்கியஸ்தர் படுகொலைசெய்யப்பட்டிருந்தார். அவர் தமிழ் அரசியற் கட்சியின் முக்கியஸ்தர். அந்தப்படுகொலை வெளிக்கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கையில் அதில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கும் நிலைக்கு இந்த நாடு தள்ளப்படுமானால் நாட்டிற்குள் நீதியை நிலைநாட்டும் பொறிமுறைகளில் பலவீனமான நிலை காரணப்படுகின்றதென்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்வதை தடுக்கமுடியாது போகும்” என்று தெரிவித்தார்.