ரவிராஜின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது

298 0

283d1e79450df7e8aee7fc07d5e824e8முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,

ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரபல அரசியல்வாதியான சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து குறித்து கருத்து தெரிவிக்கவுள்ளோம். இந்த வழக்கில் கடற்படையைச் சேர்ந்த சிலரே சந்தேகநபர்களாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஜுரி சபையின் ஏகமனதாக தீர்மானத்திற்கு அமைய அவர்கள் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ஜுரி சபையிலிருந்த உறுப்பினர்கள் சிங்களவர்கள் என்பதனால், அந்த வழக்கு தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என சுமந்திரன் தற்போது தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளாராம்.. அது குறித்து பிரச்சினை கிடையாது.

சிங்கள ஜுரி சபை என்பதற்காகவே இந்த வழக்கு தீர்ப்பை நிராகரிக்க வேண்டும் என சுமந்திரன் கூறுகின்றார். தமிழர் ஒருவருக்கு சிங்கள ஜுரி சபையினால் நியாயம் நிலைநாட்டப்படாது என கூறுகின்றனர். இவ்வாறு நாம் சிந்திப்போமாக இருந்தால், எமது நீதி கட்டமைப்பு வீழ்ச்சி காணமும் இடத்திற்கு வந்து விடும். இது நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றே கூற வேண்டும். சட்டத்தின் காணப்படுகின்ற பிரச்சினையோ அல்லது வேறு பிரச்சினையோ கிடையாது.

அவர்கள் சிங்களவர்கள் என்பதே தற்போது காணப்படுகின்றது பிரச்சினையாகும். இவ்வாறு சிந்திப்பார்களாக இருந்தால், நாட்டில் யார் இனவாதத்தை தூண்டுகின்றனர் என நான் கேட்க விரும்புகின்றேன். இலங்கை நீதிமன்றம் குறித்து இவ்வாறு கேள்வியொன்றை யாரும் எழுப்பவில்லை. குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான செயற்பாடுகளுக்கு தலையீடு செய்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரின் கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

யுத்த குற்ற விசாரணை தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் எனவும், இல்லையென்றால் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை தூக்கு மேடைக்கு அனுப்புவதற்காக வழியையே இவர்கள் ஏற்படுத்துகின்றனர். அதனையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். எனக்குறிப்பிட்டார்.