புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்புக்கும் சமஷ்டிக்கும் இடமில்லை!

251 0

mahinda-amaraweeraபுதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிக்கு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை கோட்டேகொட பிரதேசத்தில் நேற்றையதினம் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமெனத் தெரிவித்த அவர் எவரும் நினைத்தபடி இதில் மாற்றங்களைச் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியல் யாப்பின்மூலம் நாட்டினை பல பகுதிகளாகப் பிரிப்பதற்கு பலர் மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணி வருவதாகவும், இதில் எந்தவித உண்மையுமில்லையெனத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின்படி நாடு ஒன்பது துண்டுகளாகப் பிரிக்கப்படமாட்டாது. அத்துடன் வடக்குக் கிழக்கும் இணைக்கப்படமாட்டாது.

அரசாங்கம் ஒருபோதும் ‘சமஷ்டி’ ஆட்சி முறையை அறிமுகம் செய்யாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட மாட்டாது. இதை மக்கள் நம்ப வேண்டும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.