இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவர்-மஹிந்த அமரவீர

361 0

 

hqdefaultஇலங்கை மீனவர்கள் சம்மதித்தால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரதெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகஅமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர,

‘கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் அவர்களின் படகுகளும் எம்மிடம் உள்ளன. இதன்படி, அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்வதற்காக பணிப்புரையை நாம் வழங்கியுள்ளோம். நத்தார், புதுவருட பிறப்பு அதேபோன்று இந்திய கடற்றொழில் அமைச்சர் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார். இவற்றை கருத்தில் கொண்டே நாம் மீனவர்களை விடுதலை செய்கின்றோம். எனினும், கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் பொருட்களை நாம் அரசுடமையாக்கிக் கொள்வோம். அவை மீள அவர்களிடம் வழங்கப்பட மாட்டாது. அத்துடன் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு அவர்களே அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். அதிகாரிகளை நாம் அந்த கலந்துரையாடல்களுக்கு ஈடுபடுத்தவுள்ளோம்.

அதேபோன்று இந்திய கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்துவோம். அவர்களின் கோரிக்கைக்கு அமையவே நாம் இந்த கலந்துரையாடலை நடாத்துகின்றோம்.மேலும் இங்குள்ள படகுகளை விடுவிக்க வேண்டும் என்றால், இராமேஸ்வரம் பகுதிக்கு சென்றே நாம் அமைச்சு பதவியை வகிக்க வேண்டும். இலங்கையில் அமைச்சர் பதவியை செய்ய முடியாது. வடக்கிலுள்ள மீனவர்கள் எமது மீனவர்கள். தமிழராக இருக்கலாம், சிங்களவராக இருக்கலாம். அனைவரும் எமது மக்கள். எமது மக்களை பாதுகாப்பதே எமது பொறுப்பாக அமைகின்றது. இலங்கையிலுள்ள மீனவர்கள் அனைவரும் எமது மக்கள். அது வடக்காக இருக்கலாம், தெற்காக இருக்கலாம். நான் அவர்களுக்காகவே செயற்படுவேன்.

எமது வடபகுதியிலுள்ள மீனவர்களின் விருப்பத்திற்கு மாறாக எனக்கு ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் விருப்பப்பட்டால் மாத்திரமே விடுவிக்கமுடியும். வடபகுதி மீனவர்கள் படகுகளை விடுவிக்க விருப்பப்பட்டால், எனக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. எனினும், அது நடாக்காது.என்று மேலும் குறிப்பிட்டார்