வருமான வரித்துறை சோதனை தமிழ்நாட்டில் தான் அதிகம்: திருமாவளவன்

341 0

201612251053536756_income-tax-raid-tamilnadu-highest-thirumavalavan-accusation_secvpfமத்திய வருமான வரித்துறையின் சோதனை தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

கோவை சிங்காநல்லூரில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் இயக்க கொள்கை பிரகடன நூற்றாண்டு விழா மாநாடு நேற்று தொடங்கியது.

இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன், எஸ்.டி. பி.ஐ. கட்சியின் தலைவர் தெக்லான் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:-

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். அதை பெரியாரியத்தோடு இணைத்து பார்க்கக் கூடாது. அரசியல் கட்சி நடத்துபவர்கள் அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டியது உள்ளது. நம் சந்ததியர்கள் முன்னேற வேண்டுமானால் அனைவரும் படிக்க வேண்டும்.

பெரியாருக்கு பிறகு படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு சாதியினருக்கும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. அதை துடைத்து எறிய வேண்டும். அதற்கு சுயமரியாதை அதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். சமூக நீதி இருந்தால் தான் சாதி ஒழிப்பை நிலை நாட்ட முடியும். அதை அம்பேத்கரும், பெரியாரும் செய்து காட்டி உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய வருமான வரித்துறை தமிழ்நாட்டில் சில நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. அதுகுறித்து கருத்து கூற முடியாது. எந்த இடத்திலும் சோதனை செய்வதற்கான அதிகாரம் வருமான வரித்துறைக்கு உண்டு. தமிழக அரசு தான் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுகிறதா? என்பது குறித்த விளக்கத்தினை தமிழக முதல்-அமைச்சர் அளிக்க வேண்டும். மம்தா பானர்ஜி பாரதீய ஜனதா அரசின் இத்தகைய செயல்பாடுகளை துணிந்து சொல்கிறார். தமிழக அரசும் சொல்ல வேண்டும்.

மக்கள் நலக்கூட்டணி எப்போதும் போல் உள்ளது. ஆளும் கட்சிக்கு மக்கள் அதிகாரம் அளித்து உள்ளனர். முதல்-அமைச்சரை தேர்ந்து எடுக்கவும், பொதுச் செயலாளரை தேர்ந்து எடுக்கவும் அந்த கட்சியினருக்கு உரிமை உள்ளது. இது அவர்களது உள்கட்சி விவகாரம்.

மத்திய வருமான வரித்துறையின் சோதனை தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது. என்னுடைய குற்றச்சாட்டுகள் அது தான்.இவ்வாறு அவர் கூறினார்.