கருப்புப் பண வெளுப்புக்கு உடந்தையாக இருந்த கூட்டுறவு வங்க தலைவர்கள், அதிகாரிகளை நீக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்தார்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் ஆய்வுகளுக்கு இணையாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தவறான வழிகளில் ஈட்டப்பட்ட பல நூறு கோடி ரூபாய் பணம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது இந்த அதிரடி சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சேலத்தில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய வருமானவரித் துறை சோதனை ஐந்தாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
கும்பகோணத்தில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேற்று முன்நாள் முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற் கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளில் நான்கு நாட்களில் மொத்தம் ரூ.51 கோடி செலுத்தப்பட்டதாகவும், அதுகுறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்காகவே வருமான வரித் துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருவதாகவும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் 3 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் தான் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்ற போதிலும், அனைத்து மாவட்டக் கூட்டுறவு வங்கிகளிலும் பெருமளவில் கருப்புய் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.
மொத்தமுள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ரூ.2,500 கோடிக்கும் அதிக மதிப்பில் பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் மக்களும், விவசாயிகளும் செலுத்திய பணத்தின் மதிப்பு மிகவும் குறைவு என்றும், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் தான் பெருமளவிலான பணத்தை செலுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவே ஆளும் கட்சியினர் கூட்டுறவு வங்கிகளில் பெரும் பணத்தை செலுத்தியுள்ளனர். தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களே இயக்குனர்கள் மற்றும் தலைவர்களாக பதவி வகிப்பதால் அவர்களும் இந்த கருப்புப் பண வெளுப்புக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் தலை வரும், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவருமான இளங்கோவன் வருமான வரித்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது இதை உறுதி செய்கிறது.
கூட்டுறவு வங்கிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுபவை என்பதாலும், அதில் போலியான பெயர்களில் பெருமளவில் கருப்புப் பணத்தை முதலீடு செய்தவர்கள் தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் என்பதாலும் இது குறித்து தனி விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர தமிழக ஆளுனரும், தலைமைச் செயலரும் ஆணையிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.