ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அரசின் கடமையாகும். அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என இல. கணேசன் கூறினார்.
பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பொற்கால ஆட்சியில் மக்களுக்கான நீண்ட கால திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல் படுத்தப்பட்டுள்ளது.
தங்க நாற்கர சாலை திட்டம், செல்போன் பரவலாக்கல், அணு ஆயுத சோதனை, துறைமுக இணைப்பு, விமான நிலைய இணைப்பு, விண்வெளி இணைப்பு உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நதிநீர் பிரச்சனையை போக்கும் வகையில் தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் கொண்டுவரப் பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த விசாரணை முடிவுற்று தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அதனை பா.ஜனதாவும் எதிர்நோக்கியுள்ளது. அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில், அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது வெட்கப்பட வேண்டியது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கையாகும்.
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.விற்கு அடுத்த கட்சியாக பா.ஜனதா வளர்ந்து வருகிறது. இது சட்டசபை எம்.பி. தேர்தல்களில் நிருபணமாகியுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதனை நிரூபிக்கும். தேசிய நதிநீர்ப் பிரச்சனையை தீர்க்க நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும்.
அந்த ஆணையம் கோர்ட் போல் சுதந்திரமாக செயல்படும் வகையில் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் தான் நதிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க முடியும். இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனையை தீர்க்க ஒரே வழி மீன்பிடி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அரசின் கடமையாகும். அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

