கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பங்குத்தந்தை அ.ஜெ.அன்ரனி ஜெயரஞ்சன் தலைமையில் திறப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கை கடற்படையின் நிதி அனுசரணையுடன் கடற்படையினால் அந்தோனியார் ஆலய கட்டடம் புனரமைக்கப்பட்ட நிலையில், திறந்து வைக்கப்பட்டது.புனரமைக்கப்பட்ட கட்டடத்தினை யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஆசீர்வதித்து, நாடா வெட்டித்திறந்து வைத்தார்.
பெயர்ப்பலகை, வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் கூரே மற்றும் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தன ஆகியோரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டடம் கடந்த மே மாதம் 9ஆம் திகதி அத்திவாரமிடப்பட்டு, வடபிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி றியல் அட்மிரல் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் கட்டடம் புனரமைக்கப்பட்டு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழா நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத்தூதவர் ஆ.நடராஜன், யாழ்ப்பாண மறைமாவட்ட மாவட்ட குரு முதல்வர் பத்திநாதர் ஜேசப் தாஸ் ஜெபரட்ணம், மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை, இந்திய பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கச்சதீவில் இலங்கை அரசாங்கத்தால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலய திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் தீவுப்பகுதியை சேர்ந்த பாதிரியார்கள், மீனவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் 82 பேர் கச்சதீவிற்கு வருகைதந்திருந்தனர்.
பங்கு தந்தைகள் சகாயராஜ், சந்தியா, ஜெகன் உட்பட 5 பங்கு தந்தைகளும், 5 கன்னியாஸ்திரிகளும், மீனவர்கள் சங்கத் தலைவர்கள் ஜேசு, எமரிட், போஸ், அல்போன்ஸ், சந்தியா மற்றும் மீனவர்கள் உட்பட 82 பேர் 3 படகுகளில் அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், நிகழ்வில் கலந்து கொண்டனர்.

