நாட்டில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக ஜனவரி முதலாம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மகளிர் பிரிவின் ஊடாக 6 ஆவது கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 219 வீடுகளுக்கான உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது
இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, முப்படை தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சந்திர ரத்ன பல்லேகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி…..
இராணுவம், கடற்படை, விமானப்படையினர் மற்றும் பொலிஸாரை போன்ற சேவையை அன்று முதலே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரும் நிறைவேற்றி வருகின்றனர்.பல்வேறு துறைகளில் சமூக நலத்திட்டங்களையும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் சிவில்பாதுகாப்பு திணைக்களத்தினர் இன்று முன்னெடுத்து வருகின்றனர்.
அதனை போன்று கல்வி, விவிசாயம், போன்ற துறைகளுக்காகவும் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
எமது நாட்டில் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் கடந்த காலத்தில் பாரிய சேவையாற்றியமை நான் அறிவேன் . நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு இந்த திட்டத்தின் பிரதான பொறுப்பை நான் வழங்கினேன்.
இந்த நாட்டின் தொல் பொருட்களை பாதுகாக்கும் செயற்பாட்டிற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் உள்ள பெருமளவான ஊழியர்களை ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஈடுபடுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

