இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இலங்கை அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இராமேஸ்வரம் – தங்கச்சிமடம் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மௌனம் காத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் ஜனவரி மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தையில் தமது படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறு விடுவிக்கப்படாத பட்சத்தில், நாடு தழுவிய ரீதியிலான பாரிய போராட்டங்களை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இராமேஸ்வரத்தில் இன்று நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் 4 கோடி இந்திய ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவ சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

