ஆறுமுகநாவலர் இந்து சமயத்திற்கும், தமிழிற்கும் பணிகளை ஆற்றாவிட்டால் எமக்கு சமயநூல்களும் இலக்கியங்களும் கிடைத்திருக்காது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்துசமயப்பேரவையின் தலைவரும், தகைசார் வாழ்நாள் பேராசிரியருமான சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நாவலர் விழா நிகழ்வில் நாவலரின் தொலைநோக்கு எனும் ஆய்வுரை தொகுப்புநூலிற்கான வெளியீட்டு உரையினை நிகழ்த்தும் போது இதனைக் குறிப்பிட்டார்.
ஒரு சமுதாயம் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக்கூறி தமிழருக்குரிய இலக்கணம் எவ்வாறு அமைய வேண்டும் என வகுத்து, பாடசாலைகளில் மாணவர்கள் எவ்வாறு ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நற்பண்புகளை விதைத்தவர் ஸ்ரீலஸ்ரீஆறுமுகநாவலர் என்றும் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.லலீசன் தலைமையில் நடைபெற்ற நாவலர் விழா நிகழ்வில் நாவலரின் சிந்தனைகளையும், செயல்களையும் வெளிக்கொணருகின்ற நாவலரின் தொலைநோக்கு எனும் ஆய்வுரை தொகுப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலினை பேராசிரியர் மனோன்மணி சண்மகதாஸ் மற்றும் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைக்க அதன் முதற் பிரதியை சைவமகா சபையின் பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி ப.நந்தகுமார் பெற்றுக்கொண்டார்.
இன்றைய நாவலர் விழா நிகழ்வில் கரிகணன் அச்சகத்தாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண தமிழ் சங்கமும் இணைந்து நாவலர் சிலைகளை அமைந்து வழிபாட்டிற்காக பாடசாலைகளுக்கு வழங்கி வைத்தனர்.
நாவலரின் சிலைகள் வண்ணை நாவலர் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, இணுவில் இந்துக்கல்லூரி, அச்சுவேலி மத்திய கல்லூரி, உரும்பிராய் இந்துக்கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி உட்பட 30 பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நாவலர் விழா நிகழ்வில் ஸ்ரீமதி சாலினி வாகீஸ்வரசர்மாவின் பரத நாட்டிய அளிக்கையும் இடம்பெற்றது.