சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த முடியாது என நிராகரித்துள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என தெரியவருகிறது.
கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணி நேரம் மூடப்படும் காலத்தில் இந்த நஷ்டம் ஏற்படும்.கட்டுநாயக்க விமான நிலையம் மறுசீரமைப்பு பணிகளுக்காக தினமும் 8 மணி நேரம் மூடப்படும் காலத்தில் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. எனினும் சர்வதேச விமான சேவை நிறுவனங்களை மத்தள விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்க விரும்பவில்லை என்பதால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு தளம் மறுசீரமைக்கப்படும் மூன்று மாத காலத்தில் தினமும் 8 மணி நேரம் விமான நிலையம் மூடப்படுவதால், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் 6 விமான சேவைகள் முற்றாக இரத்துச் செய்யப்படும்.இதனால், மாதம் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை இரத்துச் செய்ய நேரிடும்.
கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் மூன்று மாத காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு 50 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதுடன் மேலதிக செலவும் அதிகரிக்கும்.சீனாவின் பீஜிங் மற்றும் ஷங்காய் நகரங்களுக்கு செல்லும் ஸ்ரீலங்கன் விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் வகையிலான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

