ஊவா மாகாண சபையின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் தோல்வி

313 0

231512919uvaஅபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 04 வாக்குகளால் ஊவா மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஊவா மாகாண ஆளுநர் எம்.ஜீ.ஜயசேனவினால் குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பிற்காக மாகாண சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்துள்ளன. மாகாண முதலமைச்சர் சம்பத் தசநாயக்க வாக்களிக்கவில்லை.ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

குறித்த சட்டமூலத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகரத்தை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.சுதந்திர கட்சியின் அதிகாரத்திற்கு உட்பட்ட 07 மாகாண சபைகளும் குறித்த சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று அந்த மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் கூறியிருந்தனர்.

இதேவேளை அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் சம்பந்தமாக மாகாண முதலமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.குறித்த சட்டமூலத்தின் மூலம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற இடையூறுகளை இல்லாது செய்ய முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், இதனூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மத்திய அரசின் ஒரு சிலருக்கு மாத்திரம் அதிக அதிகாரங்கள் கிடைக்கும் என்ற கருத்து நிலவியது.

எவ்வாறாயினும் அந்த சட்டமூலம் சிறந்த அதிகாரங்களுடைய அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கானதல்ல என்று அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியிருக்கின்றார்.