தமிழகம் முன்னேற வேண்டுமானால் திராவிட கட்சிகளை அப்புறப்படுத்தவேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
காரைக்குடியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் முதன் முதலில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சோதனை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழகம் ஊழலில் சிக்கி தற்போது தலைகுனிவை சந்தித்து உள்ளது.
சமீபத்தில் சேகர்ரெட்டி என்பவரின் வீட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் பணமும், 170 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் ஆளும் கட்சியில் உள்ள முக்கிய அமைச்சருக்கு நெருக்கமானவராக திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தமிழகம் முன்னேற வேண்டுமானால் இந்த திராவிட கட்சிகளை அப்புறப்படுத்தினால் மட்டுமே நல்ல விடிவு காலம் பிறக்கும் என்பதை தற்போது நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்கள் கூறி வருகின்றன.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதை பார்த்தால் கேலிக்கூத்தாக உள்ளது. இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தடை விதிக்க காரணமானவர்களே இவர்கள் தான். எனவே வருகிற 3-ந்தேதி தி.மு.க. சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்ததை அவர்கள் திரும்ப பெறவேண்டும்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பது மத்திய அரசின் அரசாணை தான். இன்னும் ஒரு வாரத்தில் அந்த அரசாணை கோர்ட்டில் இருந்து வெளிவந்துவிடும் என்று நம்புகிறோம். இதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
பிரதமர் நரேந்திரமோடி நல்ல திறமையான ஆட்சியை மட்டும் அல்லாமல், ஊழல் இல்லாத இந்தியாவை தரவேண்டும் என்பதற்காக மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்த கருப்பு பணஒழிப்பு நடவடிக்கை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஏற்று கருப்பு பணத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

