பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் செயற்பட்ட ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற சீர்த்திருத்த அமைச்சின் செயலாளர் நிமல் போககேவை, பதவி விலக்குமாறு வலியுறுத்தி அரசாங்கத்திலுள்ள 58 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமது தேர்தல் தொகுதிகளிலுள்ள மக்களுக்கு உரிய சேவையை பெற்றுக் கொடுப்பதற்காக குத்தகை அடிப்படையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் செயற்படுகின்றமையானது அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுகின்ற வாகனங்கள், அரசாங்கத்திற்கு சொந்தமாகும் வகையில் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அமைச்சின் செயலாளர் அதனை ஏற்றுக் கொள்ளாமை பாரிய பிரச்சினை என அந்த கடிதத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவூட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவையின் தீர்மானத்தை செயற்படுத்துமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அறிவித்தல் விடுத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், அமைச்சின் செயலாளர் அதனை செயற்படுத்தாமையானது அடிப்படையற்ற விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நிமல் போபகேயின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கடிதமொன்றை கையளிக்க குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

