கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்திய சூத்திரதாரியுடன் மைத்திரி

276 0

my3-24இந்தியாவின் மிகப்பெரிய மோசடி சூத்திரதாரி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார் என இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசடியுடன் தொடர்புடைய நபர், இலங்கையில் வங்கி ஒன்றை திறப்பதற்காகவே இலங்கை ஜனாதிபதியை சந்தித்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் விசேட பொலிஸ் அதிகாரிகளினாலேயே இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் 16 கோடி ரூபா பணத்தை ஆழ்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் மோசடி செய்து அதனை வைத்து இலங்கையில் வங்கி ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மோசடியுடன் தொடர்புடைய நபர், அபிஷேக் ஜோஷி என்ற 37 வயதான பி.பி.ஏ. பட்டதாரி என தெரியவந்துள்ளது.

மேலும், அந்த நபர் நிதி நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை ஜனாதிபதியை கோவாவில் சந்தித்தது மாத்திரமன்றி, இலங்கையின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்தித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

வங்கியை ஆரம்பித்து பின்னர் அயல் நாடுகளில் மோசடியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

16 கோடி ரூபா பணத்தை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ரூபா 1.38 கோடியாக பரிமாற்றம் செய்துள்ளனர்.

தலைமை நிர்வாக அதிகாரி, முன்னாள் தலைவர், தற்போதைய தலைவர் மற்றும் மோசடி சூத்திரதாரி உட்பட ஐவர் நேற்றைய தினம் இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணையின் போது, இலங்கை ஜனாதிபதியுடன் அபிஷேக் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த அதிகாரிகள் திகைத்து போயுள்ளனர்.

இதனடிப்படையில் இலங்கையில் வங்கி ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அபிஷேக் ஆராய்ந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் ராஜஸ்தான் பொலிஸ் உயர் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நபர் ஊழலில் ஈடுப்பட்டிருந்தாரா என்பது தொடர்பில் தெரிந்திராத நிலையில், ஜனாதிபதி அந்த நபரை சந்தித்திருக்கலாம் என சில தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.