இதிலும் சந்தேகம்.-வரலாற்று மண்ணிலிருந்து -மு.தமிழ்ச்செல்வன்.

376 0

இதிலும் சந்தேகம்.
*** ****
2009….!
பாட்ஸ் கடையிலிருந்து
தூக்கி எறியப்பட்டவை போன்று ஆங்காங்கே
பலதை கண்டோம்….!

உடலின் அனைத்துப் பாகங்களும் புதிதாய்க் கிடந்தன….!
பொருத்த முடியாது என்பதால் எவரும் பொறுக்கி எடுக்கவில்லை!
கையும்,காலும், தலையும்,
குடலும் என
எல்லா உதிரிப் பாகங்களும்
ஊர் ஊராய் அநாதரவாய்க்
கிடந்தன….!
சிலவற்றுக்கு
உரிமையாளர்கள்
இருந்தனர்….!

அவர்கள் இப்போதும்
ஊருக்குள் இருக்கிறார்கள்
மாற்று வலுவுள்ளவராய்….!ஆரம்பத்தில் ஒரிரண்டு
கண்ணில் பட்ட போது
மனது வலித்தது..
கண்ணீரும் வந்தது…
பின்னர்
பலதைக் கண்டோம் கடந்து
சென்றோம் மனது
மரத்துவிட்டிருந்தது….!

உயிருக்கு ஆபத்தில்லாத
பாகங்களை தெருக்களில்
கண்ட போது அட
பரவாயில்லை என்றது
மனது….!
பிஞ்சிலிருந்து முற்றியது
வரைக்கும் மெல்லிதாயும், மொத்தமாயும் கிடந்தன….!

ஓரிரண்டு பாகங்கள்தானே
போகட்டும்
உயிர் இருகிறது என்று
ஓடிக்கொண்டிருந்தோம்…!

நந்திக் கடலை கடந்து
ஓடினோம்…!
மீளவும் வந்தோம்…
மறக்காமல் இருக்க கல்லில் செய்தோம் – அட
கசாப்புக் கடைக்காரனுக்கு அதிலும் சந்தேகம்
சதை இருக்குமோ என.

வரலாற்று மண்ணிலிருந்து
-மு.தமிழ்ச்செல்வன்