விலங்குகளின் உணவுக்காக நெல்லை விற்றமையே அரிசி விலை அதிகரிக்க காரணம்!

368 0

989672471muzamil90,000 மெற்றிக் தொன் நெல்லை விலங்குகளின் உணவுக்காக விற்பனை செய்தமையால் இன்று அரிசிக்கான விலை ஆகாயமளவு உயர்வடைந்துள்ளதாக, தேசிய விடுதலை முன்னணி குற்றம்சுமத்தியுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக் கட்சியின் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸாமில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மிகை நெல் காணப்படுவதாக கூறி சுமார் 2 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை அமைச்சர் பி ஹெரிசன் விலங்குகளின் உணவுக்காக வழங்க முற்பட்டதாகவும், எனினும் மக்கள் இந்த தேசிய குற்றத்திற்கு எதிராக கிளர்ந்து நின்றமையால் 90,000 மெற்றிக் தொன் நெல்லையையே அமைச்சரால் விற்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது 90,000 மெற்றிக் தொன் நெல் என்பது சுமார் 60,000 மெற்றிக் தொன் அரிசியை உற்பத்தி செய்யக் கூடிய தொகை எனவும், இதற்கமைய, கடந்த வருடம் 60,000 மெற்றிக் தொன் அரிசியை உற்பத்தி செய்யக் கூடிய நெல்லை விலங்குகளின் உணவுக்காக விற்பனை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கமைய அரிசிக்கான விலை உயர்வடைந்து, நாட்டு மக்களின் பிரதான உணவான சோற்றுப் பார்சல் ஒன்றில் விலை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அரசாங்கம் அரிசி விலை அதிகரிப்புக்கு வறட்சியே காரணம் என காட்ட முற்படுவதாக சுட்டிக்காட்டிய முஸாமில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி முதல் நெல் உற்பத்தியை பாதிக்கச் செய்யும் வழிமுறைகளையே பின்பற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.