போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும்

243 0

download-6-1போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடாத்தப்படவேண்டுமென, நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணி பரிந்துரை செய்துள்ளது.

செயலணியின் மக்கள் கருத்தறியும் குழுவின் 500 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அறிக்கையினை நாளை காலை 10.00 மணியளவில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கவுள்ளதாகவும் அச்செயலணியின் பொதுச் செயலாளரும் மக்கள் கருத்தறியும் குழுவின் பணிப்பாளருமான பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

அவர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்,இந்த அறிக்கை தயாராகி ஒரு சில வாரங்கள் கடந்துள்ள போதிலும் ஜனாதிபதியிடம் நேரில் கையளிப்பதற்கு நேரம் வழங்கப்படாமையினாலேயே தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த குற்ற விசாரணை உள்ளிட்ட விடயங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை அறிவதற்காக அரசாங்கத்தினால், நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்தறியும் குழு நியமிக்கப்பட்டது.

கலாநிதி மனோரி முத்தேட்டுகம தலைமையிலான குழுவினர்  நாடு முழுவதும் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

செயலணியின் அமர்வுகளில் மக்கள் முன்வைத்த கருத்துக்களைத் தொகுத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்ற பரிந்துரை செயலணியின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கை நாளை 21 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கையளிக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.