யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லையாம்

236 0

591614621duglsயாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை என்றும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள் என்றும் அக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இன்றைய தினம் காலை ஈ.பி.டீ.பி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை. இருந்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாளர்களாக செயற்படுகின்றனர்.

மேலும் சிறையில் உள்ளவர் கட்சியின் ஆதரவாளரே தவிர அவர் கட்சி உறுப்பினர் அல்ல. அவர் வேறு கட்சி சார்ந்தவர். 

மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள். ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் ஈ.பி.டி.பிக்கு தொடர்பு இல்லை என்றார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், அக்கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் நெப்போலியன் மற்றும் மதனராசா ஆகிய இருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், மேலும் இருவருக்கும் சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.