கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் – டபிள்யு.எம்.என்.ஜெ.புஷ்பகுமார

237 0

download-4கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜெ.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.முதலாம் கட்ட நடவடிக்கை ஜனவரி மாதம் 03ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரை நடைபெறும்.

இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கை ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில் சுமார் 62 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இந்த தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.இம்முறை இரண்டு கோடியே 10 இலட்சம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.வரலாற்றிலேயே ஆகக்கூடுதலான மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றியுள்ளமை இதற்கு காரணமாகும்.

நேற்று முன்தினம்  நிறைவடைந்த பரீட்சை வரலாற்றிலேயே முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறைந்த அளவில் காணப்பட்ட கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜெ.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.