திருச்சி: குப்பை தொட்டியில் 1,000 ரூபாய் நோட்டுகள்- கிழித்து எறிந்த மர்ம ஆசாமி யார்?

261 0

201612182225555481_trichy-dustbin-rs-1000-notes-mystery-man-who-tear_secvpfதிருச்சியில் இன்று குப்பை தொட்டியில் கத்தையாக வீசப்பட்ட கிழிந்த 1,000 ரூபாய் நோட்டுகள் கிடந்தன. இந்த பணத்தை யார் வீசினார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மாநகராட்சி 57-வது வார்டு சோழராஜபுரம் வாத்துக்காரத்தெரு தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் மண்ணெண்னை பங்க் அருகே கழிவுநீர் வாய்க்காலையொட்டி மாநகராட்சி குப்பைத் தொட்டி உள்ளது.

இங்கு அப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்படும். இன்று காலை குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்காக மாந கராட்சி பெண் ஊழியர் அங்கு சென்றார்.

அப்போது குப்பைத் தொட்டிக்குள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.1000 நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டி போடப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்களும் குப்பை தொட்டியின் அருகே திரண்டனர். தொட்டிக்குள் ரூ.1000 நோட்டுக்கள் வெட்டி போடப்பட்டுள்ளதை பார்த்து கவலை அடைந்தனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் உறையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். குப்பை தொட்டிக்குள் ஏராளமான நோட்டுக்கள் வெட்டி போடப்பட்டு கிடந்தன. அவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்பட்டது. உறுதியான மதிப்பு தெரியவில்லை.

இவற்றை கொண்டுவந்து போட்டது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய ரூ.1000 நோட்டுக்கள் வங்கியில் செலுத்த டிசம்பர் 30-ந்தேதி காலக்கெடு உள்ளது. இந்த நிலையில் அவற்றை எதற்காக வீசி சென்றார்கள் என்பது குழப்பமாக உள்ளது.

கருப்பு பணம் என்பதால் வங்கியில் செலுத்துவதற்கு பயந்து யாராவது துண்டு துண்டாக வெட்டி குப்பைத்தொட்டி, கழிவுநீர் சாக்கடை, காவிரி ஆறு போன்ற பகுதிகளில் வீசியிருக்கலாம். இதில் வாத்துக்காரத் தெரு குப்பைத் தொட்டியில் உள்ள பணம் மட்டும் வெளியில் தெரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கருப்பு பணத்தை வீசிச் சென்ற மர்ம ஆசாமி யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி அதிகாரிகளும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் இதே இடத்தில் குப்பைத் தொட்டியில் ரூபாய் நோட்டுக்கள் லட்சக்கணக்கில் வெட்டி வீசப்பட்டு கிடந்தது. வங்கிகளில் பழைய, கிழிந்த செல்லாத நோட்டுக்களை வங்கி ஊழியர்கள் வெட்டி வீசியிருக்கலாம் என அப்போது கூறப்பட்டது.

அந்த சம்பவம் குறித்து இதுவரை உண்மை கண்டறியப்படவில்லை. இப்போது 2-வது முறையாக ரூ.1000 நோட்டுக்கள் வெட்டி போடப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.