மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு புதிய மசோதா

347 0

201612190334560962_new-bill-on-the-development-of-persons-with-disabilities_secvpfமத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக புதிய மசோதாவை நிறைவேற்றி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக புதிய மசோதாவை நிறைவேற்றி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. அதில் மாற்றுத்திறனாளி வகை 7-ல் இருந்து 21 ஆகவும், அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும், உயர் கல்வியில் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த மசோதா முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

தமிழக அரசும் இதை நிறைவேற்றும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு, நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள் இருப்பின் அதனையும் புதிய மசோதாப்படி நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகள் அரசு துறைகளில் மட்டுமல்லாமல் தனியார் மற்றும் அனைத்து துறைகளிலும் இந்த கொள்கையை கடைபிடிக்க சட்டத்தின் அடிப்படையில் வழிவகை செய்ய வேண்டும்.

த.மா.கா.வை பொறுத்தவரை இயக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு தனி அமைப்பை உருவாக்கி அதற்கு மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்கள் முன்னேற்றத்திற்காக த.மா.கா. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.