அருணாசல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் நேற்று காலை 7.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின.
இதைத்தொடர்ந்து அவற்றில் தங்கியிருந்த மக்கள் உடனே வெளியேறி வெட்டவெளிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் காலை நேரத்தில் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த வித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் நிலைமையை கண்காணிக்குமாறு மாவட்ட அதிகாரிகளை தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டார். யாங்கியாங் மாவட்ட தலைநகருக்கு கிழக்கே 116 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்த இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 106 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

