வடக்குக் கிழக்கு மாகாண மக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் ஓய்வுபெற்ற மூன்று தமிழ்பேசும் மூத்த காவல்துறை அதிகாரிகள் இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.
சிறீலங்கா காவல்துறை ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார்.
மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்களான அரசரட்ணம், கணேசநாதன் மற்றும் செல்வராஜா ஆகியோர் வடக்குக் கிழக்குக்கு மாகாணங்களுக்கும், பயிற்சி மையங்களுக்கும் இணைப்பதிகாரிகளாக செயற்படவுள்ளனர்.தமிழ் பேசும் மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறைகளில் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும்போது தாம் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும், தம்மால் விளங்கிக்கொள்ளமுடியாத காவல்துறை அறிக்கைகளில் கையெழுத்திடுமாறு பணிக்கப்படுவதாகவும் தமிழ் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
வடக்கில் பணியாற்றும் பதினையாயிரம் காவல்துறையினரில் பெரும்பாலானவர்கள் தமிழ் பேசமுடியாதவர்களாகவே உள்ளனர்.இந்நிலையில், கிழக்கு மாகாணத்துக்கான இணைப்பதிகாரியாக அரசரட்ணமும், வட மாகாணத்துக்கான இணைப்பதிகாரியாக கணேசநாதனும், நீர்கொழும்பு காவல்துறை பயிற்சி மையத்துக்கான இணைப்பதிகாரியாக செல்வராஜாவும் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

