ஓய்வு பெற்றுள்ள பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய பொலிஸ ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரையும் சேவையில் இணைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ் செல்வராஜா பயிற்சி பிரிவு பணிப்பாளராகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி கணேசநாதன் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் தமிழ் அதிகாரிகளின் அலுவல்கள் மற்றும் அந்த மாகாணத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தவிர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரத்ணம் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் தமிழ் அதிகாரிகளின் அலுவல்கள் மற்றும் அந்த மாகாணத்தின் சமூக பொலிஸ் கடமைகளை கண்காணிக்க இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதன்படி இந்த மூன்று பேரும் 06 மாத காலத்திற்கு கடமைகளை மேற்கொள்ள உள்ளனர். தமிழ் மொழி தெரிந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இல்லாததன் காரணமாக ஓய்வு பெற்ற இந்த அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே அத தெரணவிடம் கூறினார்.

