கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு தீர்வு வழங்காது ஒருபோதும் ஸ்ரீலங்காவில் நிரந்தர மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்பதை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.
இதனாலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலைமாறு நீதிப்பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணை அணுசரணை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்ரிபாலவுடன் இணைந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீலங்கா வளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
“ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கட்டமைப்புக்களை மறுசீரமைக்கும் அதேவேளை புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய புதிய அரசியல் யாப்பு நகல் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதிய அரசியல் யாப்பு ஸ்ரீலங்காவில் சகல இனங்களினதும் தனித்துவத்தை உறுதிப்படுத்தும். மலேசியாவைப் போன்று ஸ்ரீலங்காவும் பல்லினஇ பல மத மற்றும் பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடாகும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஸ்ரீலங்காவில் நிரந்தர மற்றும் உறுதியான சமாதானத்தை கட்டியெழுப்புவுதற்கு பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மிகவும் அத்தியவசியமானது. இதனால்தான் நிலைமாறு நீதிப் பொற்முறையை ஏற்படுத்தும் தீர்மானத்தை ஜெனீவாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணை அணுசரணை வழங்கியது. சர்வதேச அழுத்தம் காரணமாக நாம் இதனை செய்யவில்லை. கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு தீர்வு காணாது முன்னோக்கி செல்ல முடியாது என்பதை எமது அரசாங்கம் உறுதியாக நம்புவதாலேயே நாம் ஜெனீவாத்தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்கினோம். அத்துடன் இதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து செயற்படுவதாலேயே எமது நாட்டின் ஜனாதிபதியே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையை கட்டியெழுப்பும் நல்லிணக்க அமைச்சையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்.
என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

