கிளி- இராமநாதபுரம் இரட்டைப்பனைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைப்பு (காணொளி)

311 0

kasippuகிளிநொச்சியில் இராமநாதபுரம் இரட்டைப்பனைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு, பல இலட்சம் ரூபா பெறுமதியான கோடா மற்றும் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இராமநாதபுரம் இரட்டைப் பனைக்குளம் பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு விசேட போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை சுற்றி வளைத்து, பல இலட்சம் மில்லி லீற்றர் கோடா கசிப்பு என்பவற்றைக் கைப்பற்றியதுடன், சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனை, கசிப்பு விற்பனை என்பன அதிகரித்து காணப்படுகின்றது.

இதனை தடுக்கும் வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெலிக்கன்ன மற்றும் கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஸ ஆகியோரின் கட்டளைக்கு அமைவாக விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளோரை கைது செய்து வருகின்றனர்.

இதற்கமைய போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இன்று இராமநாதபுரம் இரட்டைப்பனைக்குளம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்  இவர்களிடமிருந்து ஆறு இலட்சத்து 74 ஆயிரத்து 750 மில்லி லீற்றர் கோடா, 55 ஆயிரத்து 550 மில்லி லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன் படுத்தப்படும் உபகரணத்தொகுதிகள் 3 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கிளிநொச்சி பகுதி மக்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.