மட்டக்களப்பு – வாகரை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவுக்கு பூட்டுப்போட்டு பிரதேச மக்களினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் கதிரவெளி புதூர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கதிரவெளி – புச்சாக்கேணி, புதூர் மற்றும் வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் அரச காணியினை சட்டவிரோதமாக விற்பனை செய்தல், கடாழித்தலை தடுத்தல், அரச காணிகளை வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதை உடன் நிறுத்தவேண்டும்.
இந்த பகுதிகளில் காணப்படும் அரச காணிகளை உடனடியாக பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கையகப்படுத்த வேண்டும் போன்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் பொது மக்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேச இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களில் அரசியல் வாதிகளிடம் எடுத்துக்கூறியும் இதுவரைக்கும் காணி தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என கூறியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பிச்சை எடுத்தாலும் தாய் மண்ணை விற்றுப் பிழைக்காதே, அரச காணி விற்பனைக்கு இல்லை, இடைத்தரகரே வெளியேறு, விற்காதே விற்காதே அரச காணியை விற்காதே போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது இந்த இடத்திற்கு வருகைத்தந்த பிரதேச செயலாளர் செல்வி சு.ராகுலநாயகியிடம் ஆர்ப்பாட்டம் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவு பூட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களினால் திறக்கப்பட்டு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களை உள்நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்:
கதிரவெளி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புதூர் கிராமம் மற்றும் புச்சாக்கேணி ஆகிய காணிகளுக்கு இன்றைய தினமே பொலிஸாருடன் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகளை அகற்றுமாறும் பணிப்பரை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரத்தை அண்டிய சுமார் 65 ஏக்கர் காணிகள் அதற்கான காணி அனுமதிப் பத்திரம், உறுதி உள்ளிட்ட ஆவணங்களின்றி தனிப்பட்ட இடைத்தரகர்கள் மூலம் தனியார்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த காணிகளுக்கு எந்த வித ஆவணங்களும் இல்லை. என பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிரதேச செயலகத்தின் நிருவாக நடவடிக்கை சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டத்திற்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்காக மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்படுத்தியவர்கள் அழைந்திருந்த நிலையில் எந்தவொரு அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளவில்லை, எங்களிடம் அவர்களின் வாக்கு வங்கியை நிரப்புவதற்கு மாத்திரம் அழைத்தால் உடன் வருவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


