இந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்

298 0

india-china-1இந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில் இப்பிராந்தியம் மீதான தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.

இந்திய-சிறிலங்கா உறவானது இந்தியாவிற்கு முக்கியத்துவம் மிக்கது எனவும் குறிப்பாக இந்திய மாக்கடலில் இந்தியா தனது இருப்பை நிலைப்படுத்துவதற்கு சிறிலங்காவுடனான உறவு இன்றியமையாத ஒன்று எனவும் இந்திய வெளி விவகார அமைச்சைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என இந்தியா ஆரம்பத்தில் எதிர்பார்த்த போதிலும், தற்போது சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து வெளிப்படுத்தப்படும் சில சமிக்கைகள் இந்தியாவின் இத்தகைய எதிர்பார்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சீனாவுடனான பாரிய திட்டங்கள் சிலவற்றை இரத்துச் செய்யப் போவதாக ஆட்சிக்கு வரும்போது அதிபர் சிறிசேன அறிவித்த போதிலும், தற்போது சீனாவுடன் மீண்டும் தொடர்பைப் பேணுவதுடன் சீனா சிறிலங்காவில் திட்டங்களை மேற்கொள்வதற்கும் தற்போதைய கொழும்பு அரசாங்கம் அனுமதிப்பதானது இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பிற்கு வடக்கே 3000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாகிஸ்தானின் குவடார் துறைமுகமும் சீனக் கடற்படைக் கப்பல்களில் தரிப்பிடமாக மாறியுள்ளதும் இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சீன-பாகிஸ்தான் பொருளாதார நடவடிக்கைகளுக்கான கடல்வழி மையமாக விளங்கும் குவடார் துறைமுகத்தில் தனது போர்க்கப்பல்களை நிறுத்தி வைப்பது தொடர்பில் சீனா திட்டமிடுகிறது.

தனது அயல்நாடான பாகிஸ்தானில் சீனாவின் கடற்படைக் கப்பல்கள் தரித்து நிறுத்தப்படுவதன் காரணமாக இந்தியக் கடற்படையினர் குவடார் துறைமுகத்தைச் சூழவுள்ள பிரதேசத்தை நெருக்கமாக கண்காணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.

சீனாவிடமிருந்து டாக்கா இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு உடன்பட்ட பின்னர், இந்தியாவிற்கு சவாலாக எழுந்துள்ள மூன்றாவது பிராந்திய கடற்படை மையமாக பங்களாதேஷ் மாறியுள்ளது.

‘இந்திய மாக்கடல் பிராந்திய பாதுகாப்பு நிலைமையானது உறுதித்தன்மையற்றுக் காணப்படுகிறது. இதன் காரணமாக ‘போருக்குத் தயார்ப்படுத்தலும் ஆனால் அமைதிக்கான நம்பிக்கை’ என்பதை விட ‘போருக்குத் தயார்ப்படுத்தலும் சவால்களை முறியடிப்பதற்கு திட்டமிடலும்’ என்கின்ற கோட்பாட்டை பின்பற்ற வேண்டியுள்ளது. இப்பிராந்தியத்தின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கான மூலோபாயம் ஒன்றை இந்தியா பின்பற்றி வருகிறது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பூகோள-அரசியல் சூழலைக் கருத்திற் கொள்ளும் போது, சீனாவுடன் உறவைப் பேணும் இந்திய மாக்கடல் பிராந்திய நட்பு நாடுகள் சிலவற்றிடமிருந்து எவ்வித உதவியையும் பெறாதே இந்தியா தனது மூலோபாயத்தை அமுல்படுத்த வேண்டியிருக்கும்’ பிலிப்பைன்ஸ் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பணியாற்றிய இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான யோகேந்திர குமார் தெரிவித்தார்.

‘சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிடம் கையளிப்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இது உண்மையில் இந்தியாவிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். இந்திய மாக்கடலில் சீனா தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்றமை தெளிவாகின்றது’ என இராஜதந்திரியான யோகேந்திர குமார் மேலும் தெரிவித்தார்.

இதன்காரணமாக இந்தியா இரு முனைப்புக் கொண்ட மூலோபாயம் ஒன்றை வரைய வேண்டியுள்ளது. முதலாவதாக கிழக்கு இந்திய மாக்கடலில் சீனக் கடற்படைச் செயற்பாட்டைக் கண்காணித்தலும் இரண்டாவதாக இப்பிராந்தியத்தின் அதிகாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கையை எடுத்தலும் என இரு முனைப்புக் கொண்ட மூலோபாயத்தை இந்தியா வரைய வேண்டும்.

வழிமூலம் – sputnik
மொழியாக்கம் – நித்தியபாரதி