தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்பையும் மீறி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்றைய தினம் திடீரென யாழ்ப்பாணத்திக்குப் பயணம் செய்து மாதிரி பொருத்துவீடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.
யுத்ததினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு யாழ்ப்பாணம் உரும்பிராயில் அமைக்கப்பட்ட பொருத்துவீடுகளையே குறித்த அமைச்சர்கள் பார்வையிட்டுள்ளனர்.
குறித்த அமைச்சர்கள் இருவரும் விசேட உலங்கு வானூர்திமூலம் பாசையூர் விளையாட்டு மைதானத்தில் இறங்கி உரும்பிராய் பொருத்து வீடுகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடியதுடன் ஒருசில மணித்தியாலங்களிலேயே அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
பொருத்து வீடுகளைப் பெறுவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவிக்கின்றார்.
இருப்பினும், யாழ்ப்பாணத்தின் காலநிலைக்கு பொருத்துவீடுகள் சாத்தியமற்றது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற அமர்வில் இது குறித்து மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே நிதியமைச்சருடன் மீள் குடியேற்ற அமைச்சர் அவசரமாக யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டு பொருத்துவீடுகளைப் பார்வையிட்டுள்ளார்.

