ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரிக்கும் – சுமந்திரன்

285 0

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய கூட்டத்தில் விஷேடமாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் நில அபகரிப்பு வெவ்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றது. பல்வேறு சட்டங்களைப் பாவித்து எங்களுடைய மக்களின் வழிபாட்டுத் தலங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நில அபகரிப்பில் ஈடுபட்டிருக் கிறார்கள். தொல்லியல் திணைக்களம் வருகை தந்து அடையாளப்படுத்தி வருகின்றது. ஆராய்ச்சி செய்கின்றது. இதை தடுப்பது பற்றி தமிழ் தேசிய கட்சிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் முடிவெடுக்கப்பட்டது.

வட கிழக்கு சிவில் அமைப்புகள், மத ஸ்தாபனங்கள் இப்பொழுது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி, அரசியல் கைதிகள் விடயம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நீண்டகால பிரச்சினைகள் மற்றும் ஜனாசா எரிப்பு விவகாரம், மலையக மக்களின் 1000 ரூபா சம்பள விவகாரம் தொடர்பாக நீண்ட பட்டியல் தொடர்பாக சிவில் அமைப்புகளின் போராட்டத்திற்கு அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்க வேண்டிய பொறுப்புள்ளது.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடர் சம்பந்தமாகவும், மூன்று கட்சிகள் சேர்ந்து அனுப்பிய கடிதம் சம்பந்தமாகவும் இன்று கலந்துரையாடினோம். இது முக்கியமான ஒரு விடயம். இந்த ஒற்றுமை தொடர வேண்டும். கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று செயற்பட்டோம்.

தற்போது இரு தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கின்றபடியினால் தமிழ் தேசிய கட்சிகள் என்பதில் ஏனைய இரு கட்சிகளுக்கும் பங்குள்ளது. எமது விண்ணப்பத்தை 47 உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.அங்கு இடம்பெறும் தீர்மானம் குறித்து தொடர்ந்து ஆராய இருக்கின்றோம்.

ஜனாதிபதி ஆணைக்குழு என்பது கண் துடைப்பு நாடகம். ஆணைக்குழுக்களின் அறிக்கையை ஆராய இன்னொரு ஆணைக்குழு, அவர்களில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை. உள்நாட்டிலே அனைத்தையும் செய்து முடிப்போம். ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு தேவையில்லை என்று கடந்த பெப்ரவரி மாதம் கடிதம் மூலம் அறிவித்த அரசாங்கம் இந்த பெப்ரவரி மாதத்துக்கு முன்பதாக ஆணைக்குழுவை நியமித்து உள்ளமை அரசாங்கம் சர்வதேசத்தை முட்டாளாக்குகின்ற விடயத்தைக் கைவிட்டு நேர்மையாக செயற்பட வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப் படுத்தினாலே எவ்வளவு தூரம் முன்னேறலாம். இவர்களது ஆணைக்குழுவை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளப் போவதே யில்லை.இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிராகரிக்கும் என நம்புகின்றோம்.

புதிய அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியிருக்கிறது. அதற்கு எமது யோசனைகளையும் நாம் அனுப்பியிருக்கிறோம். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வில்லாமல் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது அர்த்தமற்றது என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதனை தீர்ப்பதற்கான பல வரைபுகள் பல தடவைகள் செய்யப்பட்ட நிலையிலேயே இருப்பதை நினைவுபடுத்தியுள்ளோம். அந்தக் குழு இந்த மாதம் 20 ஆம் திகதி எம்மை சந்திப்பதற்கு ஒழுங்குசெய்துள்ளது. எனவே நேரடியாக சந்திக்கும்போதும் எமது நிலைப்பாடு பற்றிக் கூறுவோம்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அது ஒரு கேலிக்கூத்தான விடயம் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இது சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு நாடகம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தினாலேயே நாம் எவ்வளவோ தூரம் முன்னேறலாம்.

அவற்றை ஆராய்வதற்கு இன்னொரு ஆணைக்குழு தேவையே இல்லை. இதை மனித உரிமைகள் பேரவை முற்றுமுழுதாக நிராகரிக்கும் என்று நம்புகிறோம்.

கடந்த நல்லாட்சி அரசு நல்லிணக்க அடிப்படையில் சிறிய சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதன் நிமித்தம் ஜனாதிபதி வேறு திசைகளில் பயணிக்கத் தயாராகி விட்டார் என்ற சமிக்ஞைக்கு ஆதரவாக நானும் சம்பந்தனும் நல்லெண்ண அடிப்படையில் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கெடுத்தோம்.

அந்த அரசின் செயற்பாடுகள் திசை மாறி எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்ததன் காரணமாக நாங்கள் அவ்வாறான நிகழ்வுகளைப் புறக்கணித்தோம். இனிவரும் காலங்களில் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்குபற்றப் போவதில்லை எனக் குறிப்பிட்டார்.