ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் தான், கடற்படைத் தளபதியிடம் விசாரணை செய்ததாக, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத தெரணவுக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக வாளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கலைக்க முற்பட்ட போது நேற்று அப் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் சில ஊழியர்கள் காயமடைந்ததோடு, ஊடகவியலாளர்களுக்கும் கடற்படையினரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடற்படைத் தளபதியால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக செய்திகள் வௌியாகியதோடு, தான் அது தொடர்பில் தனிப்பட்ட வகையில் விசாரணைகளை முன்னெடுத்ததாக, கருணாசேன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில், தன்னால் எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என, கடற்படைத் தளபதி இதன்போது கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், பலவந்தமாக சர்வதேச கப்பல் ஒன்றை மறித்து வைத்திருப்பது பாரிய குற்றம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், இவ்வாறு மறிக்கப்பட்ட கப்பலை விடுவிக்க தமது அதிகாரத்தை பயன்படுத்த கடற்படையினருக்கு முடியும் எனவும், பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

