நெல்லையில் நேற்று நடந்த விழா ஒன்றில், பச்சை தமிழகம் கட்சி தலைவரும், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான உதயகுமார் பங்கேற்று பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, சிறுகூட்டம் பிடித்து 75 நாட்கள் தனிமைப்படுத்தி திடீரென இறந்ததாக அறிவிப்பது ஜனநாயக நாட்டில் நடக்காத விஷயமாக உள்ளது. இங்கு குழம்பிய குட்டையில் எப்படி மீன் பிடிக்கலாம் என சிலர் காத்திருக்கின்றனர். இதன் பின்னணியில் காவி அரசு இருக்குமோ என்ற அச்சம் உள்ளது. தமிழக அரசியலில் இனி கூட்டு தலைமை மிகமுக்கியம்.
ஊழல், மதவாதம் போன்ற பல்வேறு சிக்கல்களில் இருந்து நாம் விடுபட வழியை தேட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது இறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருவதால் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் அவர் பெயரிலேயோ, கட்சி பெயரிலேயோ அறக்கட்டளையாக மாற்றி அதில் வரும் நிதியை ஏழைகளுக்கு உதவ செலவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த சொத்துகள் தனி நபர்கள் கைகளில் செல்ல விடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

