சசிகலா பொதுச்செயலாளராகி வழி நடத்தவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

306 0

201612110412057782_must-guide-public-general-secretary-shashikala-panneerselvam_secvpfஅ.தி.மு.க.வை தொடர்ந்து கட்டுக்கோப்புடன் கொண்டு செல்ல சசிகலா பொதுச்செயலாளராகி வழிநடத்தவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஒரு பெரிய வெற்றிடம் உருவாகியிருக்கிறது.

அந்த வெற்றிடத்தை நிறைவு செய்ய வேண்டி, அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதனை பற்றி உங்களின் கருத்து என்ன என வினவப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய அவர், ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, அவரின் மெய்க்காப்பாளராக, உயிர் காக்கும் தோழியாக, உன்னத சேவகியாக, உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்து வருபவர் சசிகலா.

எண்ணில்லாத சோதனைகளையும், வேதனைகளையும் ஜெயலலிதா சந்தித்த காலகட்டங்களில் அவருக்கு உற்ற துணையாக இருந்து அந்த துன்பங்களை பகிர்ந்து கொண்டவர் சசிகலா.

ஜெயலலிதாவுடன் 33 ஆண்டு காலம், இணைந்து நின்று அவரது சிந்தனையை, செயலாற்றலை, தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருப்பவர் சசிகலா.

ஜெயலலிதா இந்த இயக்கத்தின் நிர்வாகிகளை மட்டுமல்ல தொலை தூர ஊரின் கடைகோடி கிராமத்தில் கழகக் கொடியை ஏந்தி நிற்கும் சாதாரண தொண்டனைக் கூட அறிந்து வைத்திருந்தார்.

அவர் கூடவே இருந்து அவரைப் போலவே இந்த இயக்கத்தின் தொண்டர்களை அறிந்து வைத்திருப்பவர் சசிகலா.

இந்த இயக்கத்தை ஜெயலலிதா வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன், ஒரு இராணுவ அமைப்பு போல் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒரே வழி சசிகலாவை இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகி வழிநடத்துவது ஒன்றே ஆகும்.

இதில் மாற்றுக் கருத்து இந்த இயக்கத்தில் இல்லை.

அப்படி ஒரு மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர் எவரேனும் இருந்தால், அவர் இந்த இயக்கத்தின் தொண்டன் இல்லை, ஜெயலலிதாவின் பிள்ளை இல்லை, எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்பும் இல்லை.

அதனால்தான், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்திட, கழக முன்னணியினர் சசிகலாவை சந்தித்து தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.